Mar 15, 2009

இஸ்லாம் கூறும் அழகியகடன்


உலகில் வாழும் அன்றாடங்காச்சி முதல் அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டே வருகின்றனர். இவர்களின் கொடுக்கல்- வாங்கல்கள், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் மத்தியில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிளவை ஏற்ப்படுத்துவதையும், பிரச்சினைகள் ஏற்பட்டு கோர்ட் படியேறுவதையும், சில வேளைகளில் கொலையில் போய் முடிவதையும் பார்க்கிறோம்.இதற்கு அடிப்படை காரணம் கொடுக்கல்-வாங்கலில், இவர்கள் இஸ்லாமிய வழிமுறையை கடைபிடிப்பதில்லை. இறைவனை வணங்கும் விஷயத்திலிருந்து மனிதனின் அன்றாட வாழ்க்கை வரை வழிகாட்டும் வல்ல இறைவனின் மார்க்கம் இதற்கும் ஒரு அற்புதமான வழியை காட்டுகிறது.

முதலில் யாருக்கு கடன் கொடுக்கவேண்டும்;
நம்மிடத்தில் ஒருவர் கடன் கேட்கிறார் என்றால் கேட்டவுடன் தூக்கிக்கொடுத்துவிடக்கூடாது. அவர் எந்த விஷயத்திற்காக கடன் கேட்கிறார் என்பதை அறிய வேண்டும். கடன் கேட்பவர்களில் மூன்று சாரார் உண்டு.
* கல்வி-மருத்துவம்-உணவு, உடை, இருப்பிடம்,தொழில் தொடங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைக்காக கடன் கேட்பவர்கள்.
*மது- சூதாட்டம் போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவதற்காக கடன் கேட்பவர்கள்.
*ஊர் மெச்சவேண்டும் என்பதற்க்காக ஆடம்பர திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, கந்தூரிவிழா இதுபோன்ற இன்னும் பல பித்அத்தான காரியங்களை செய்வதற்காக கடனுதவி கேட்பவர்கள்.
இவர்களில் முதல் சாரார் மட்டுமே நாம் கடன் வழங்க தகுதியானவர்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.5:2.
கடன் கொடுப்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை;
இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரும்பாலும் நம்மவர்கள் எழுதி வைத்துக்கொள்வதில்லை.மேலும், கடன் கொடுக்கும்போது சாட்சிகளும் வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் பிரச்சினைக்கு அடிப்படை காரணமே இதுதான். அல்லாஹ் கூறுகின்றான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلاَ يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإن كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لاَ يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُواْ شَهِيدَيْنِ من رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاء أَن تَضِلَّ إْحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الأُخْرَى وَلاَ يَأْبَ الشُّهَدَاء إِذَا مَا دُعُواْ وَلاَ تَسْأَمُوْاْ أَن تَكْتُبُوْهُ صَغِيرًا أَو كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِندَ اللّهِ وَأَقْومُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلاَّ تَرْتَابُواْ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلاَّ تَكْتُبُوهَا وَأَشْهِدُوْاْ إِذَا تَبَايَعْتُمْ وَلاَ يُضَآرَّ كَاتِبٌ وَلاَ شَهِيدٌ وَإِن تَفْعَلُواْ فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَيُعَلِّمُكُمُ اللّهُ وَاللّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.2:282.
* தேவைப்படின் அடமான பொருளை வாங்கிக்கொண்டு கடன் கொடுத்தல் சிறந்தது;
அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُواْ كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللّهَ رَبَّهُ وَلاَ تَكْتُمُواْ الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.2:283.

மேலும்,ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.நூல்;புஹாரி,எண் 2513

கடன் கொடுத்தவர் கஷ்டத்தில் இருந்தால், கடனை பாதியாக குறைப்பது; அவகாசம் அளிப்பது; தள்ளுபடி செய்வது.
*பாதியை குறைத்தல்;
கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!" என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 471

*அவகாசம் அளித்தல்[அல்லது]தள்ளுபடி செய்தல்;
அல்லாஹ் கூறுகின்றான்;

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَن تَصَدَّقُواْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.2:280.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2391

கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு;
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்;புஹாரி,எண் 2401
கடன் வாங்கியவர்களின் கடமைகள்;
நம்மில் பெரும்பாலோர் கடன் வாங்கும்போது அதை திரும்பச்செலுத்தும் எண்ணத்துடன் வாங்குவதில்லை. 'அல்வா' கொடுக்கும்நோக்கத்தோடு கடன் வாங்குபவர்களும் உண்டு. ஆனால் ஒரு உண்மையான முஸ்லீம் கடனை திரும்பச்செலுத்தும் நோக்கத்துடனே கடன் வாங்கவேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.நூல்;புஹாரி,எண் 2387

வாங்கிய கடனை விரைவாக திருப்பி செலுத்துதல்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். நூல்;புஹாரி,எண் 2400

கடனாளிக்கு தொழுகை நடத்த மறுத்த நபி[ஸல்] அவர்கள்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்;புஹாரி,எண் 2295
கடனிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்; புஹாரி,எண் 2397

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை கடன் வாங்குவதிலிருந்து பாதுகாத்து, இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ அருள்புரிவானாக!

No comments: