Jul 26, 2010

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடரும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த ஆண்டும் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவம், பொறியியல், தொழில் படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 69 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், அருந்ததியினர், இஸ்லாமியர் என சதவீத வாரியாக பிரித்து தரப்படுகிறது.

இந்நிலையில், தொழில் கல்வியில் குறிப்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மூத்த வக்கீல் கே.எம்.விஜயன், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1994ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கும். இடைக்கால உத்தரவில், சம்பந்தப்பட்ட ஆண்டில் மாநில அரசு அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடரலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர்குமார் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அரசியலமைப்பு சட்ட வழக்காக விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் பின்தங்கிய மக்கள் உள்ளனரா என்பதற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் தமிழக அரசு கொடு¢க்க வேண்டும்.

அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று மண்டல் கமிஷன் வழக்கில் விலக்கு அளிக்கப்பட்டதை, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கலாம். அதுவரை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும். இந்த உத்தரவோடு இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

தினகரன்-14-7-2010